சதாம் ஹுசைன் மேற்கு நாடுகளுக்கு சிம்ம சொற்பனமாக திகழ்தவர்.
2006 டிசம்பர் 30. தூக்கிலிட்டு கொல்லப்பட்டார். ஐ.நா வினால் ஈராக்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது எதுவித பயங்கர ஆயுதங்களும் ஈராக்கில் கண்டெடுக்கப்படவில்லை. பின்னர் தான் தெரியவந்தது அமெரிக்காவும் பிரிட்டனும், ஈராக் மீது பயங்கரவாத ஒழிப்பு யுத்தம் நடாத்தியதற்கான காரணங்கள் போலியானவை என்று.
இது பற்றி ஐ.நா வோ உலக நாடுகளோ தட்டிக் கேட்கவில்லை. தட்டிக் கேட்பதென்றால் மீண்டும் சதாம் ஹுசைன்தான் வரவேண்டும். சதாம் மீண்டும் ஈராக் வருகின்றார். வேறொரு ரூபத்தில் சதாம் ஈராக் வருகின்றார்.
ஈராக்கையும் சதாம் ஹுசைனையும் அநியாயமாக அழித்தவர்கள், பூண்டோடு அழிப்பதற்கு மறந்துவிட்டார்கள்.
சதாமின் குடும்பத்தவர்களை குறிவைத்து அழித்தார்கள். என்றாலும் சதாமின் மூத்த புதல்வி ரகாட் சதாம் ஹுசைன் ஜோர்தானில் தஞ்சம் புகுந்திருந்தார். சதாமின் குடும்பத்தில் எவரும் எஞ்சிவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்தவர்களுக்கு இது பெரும் தலைவலியைக் கொடுத்தது. பின்னர் ஈராக்கின் பொம்மை அரசின் மூலம் இன்டர்போலுக்கு, 2010 நடைபெற்ற தேர்தலில் குண்டுத் தாக்குதல் நடாத்த ரகாட் சதாம் திட்டமிட்டிருந்தார் என்று மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. என்றாலும் ஜோர்தானின் அரச வம்சம் அவரை கைது செய்ய அனுமதியை வழங்கவில்லை.
தற்போது 48 வயதையுடைய ரகாட் சதாம் ஹுசைன் 2018 ல் ஈராக்கில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கூட்டணி அமைத்து களமிறங்க தயாராகி வருகின்றார். இதற்காக சில குழுக்களுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டதாக தெரிய வருகின்றது.
ரகாட் சதாம் ஹுசைனின் வருகை சிலருக்கு அதிர்ச்சி வைத்தியமாக அமையப் போகின்றது என்பதை எதிர்பார்க்கலாம்.