அஷ் – ஷெய்க், அல் உஸ்தாத் கைருல் பஷர் 12/3/2017 அன்று வபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
உஸ்தாத் கைருல் பஷர் முதல் தலைமுறை நளீமிக்களில் மிகவும் முக்கியமானவர். ஜாமிஆ நளீமிய்யாவில் இருந்து கற்று வெளியேறியதன் பிறகும் ஜாமிஆவிலேயே விரிவுரையாளராக கடமை புரிந்து வந்தார். இலங்கை முஸ்லிம் சமூகத்தில் ஜாமிஆ நளீமிய்யாவுக்கு இருந்த நற்பெயர் மற்றும் உயர் கெளரவத்தில் ஷெய்க் கைருல் பஷருக்கும் கட்டாயம் ஒரு பங்கிருக்கிறது. உஸ்தாத் மன்சூர் போன்றோ, ஷெய்க் அகார் முஹம்மத் போன்றோ ஜனரஞ்சகமான ஒரு புகழ் கைருல் பஷர் சேருக்கு இல்லாவிட்டாலும் ஷரீஆ துறையினர் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் தஃவா களத்தில் உள்ளவர்கள் ஷெய்க் கைருல் பஷரை அறிந்தே வைத்துள்ளனர். ஒரு விரிவுரையாளர், எழுத்தாளர், பேனா முனை முஜாஹித் என்று பன்முகப்பட்ட தளங்களில் ஓயாமல் உழைத்த ஆளுமை, உஸ்தாத் கைருல் பஷர். இன்று அவரது ஸ்தூல உடல் இல்லை. ஆனால் அவரது நினைவுகளுக்கு செங்கல் சாட்சியமாக ஜாமிஆ நளீமிய்யா கலாபீடமும், உயிருள்ள சாட்சியாக அவரது மாணவர்களும் பூவுலகம் நிலைப்பெற்று இருக்கும் வரையில் இருப்பார்கள். இன்ஷா அல்லாஹ்.
ஷெய்க் கைருல் பஷரை நான் இதுவரையில் நேரில் சந்தித்தது இல்லை. ஆனால் அவரை சந்திக்கும் ஆவல் எனக்குள் இருந்தது. இனிமேல் அது சாத்தியம் இல்லை என்கிற ஏமாற்றத்தை விட அவருடைய ஆழமான ஆன்மீக உயிரோட்டமும், உரைநடைத் திறனும் கொண்ட எழுத்துக்கள் தொடராது என்கிற கவலையே அதீதமாக இருக்கிறது. ஜாமிஆ நளீமிய்யாவின் ஆய்வு சஞ்சிகையான ‘இஸ்லாமிய சிந்தனை’யில் கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து எழுதி வந்தவர், ஷெய்க் கைருல் பஷர். அலங்காரமோ, ஜோடனைகளோ அற்ற நேரடியான எழுத்து முறை அவரது. ஷரீஆ சார்ந்த விடயங்களை பேசுவதற்கு அப்படியான Plain எழுத்து முறைதான் சரியானது என்று அவர் பிரக்ஞை பூர்வமாக தேர்ந்து கொண்டாரா என்று தெரியவில்லை ஆனால் அந்த எழுத்து முறைதான் அவரது பலம். ஆர்ப்பாட்டம் இல்லாத எழுத்து அது. அவரும் தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்கிற எண்ணமே இல்லாத ஒருவர். ஷெய்க் கைருல் பஷர் ஒரு ஆசிரியராக, விரிவுரையாளராக எத்தகைய பங்கினை ஜாமிஆவிலும், சமூகத்திலும் ஆற்றினார் என்பதை அவருடைய மாணவர்கள் தான் கூற வேண்டும். ஒரு வாசகனாக அவருடைய “உலூல் அஸ்ம் – திடவுறுதி பூண்ட நபிமார்கள்” என்கிற நூலை மிகவும் முக்கியமான அறிவுத் துறை பங்களிப்பாக நான் கருதுகிறேன். முஸ்லிம் சமூகத்தில் நபிமார்கள் வரலாறு என்கிற பெயரில் பரவியுள்ள கட்டுக்கதைகளை நாம் அறிவோம். இத்தனை அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் பிறகும் அவற்றை முற்றிலும் நீக்க முடியாத அளவுக்கு அவை மக்கள் மனதில் வலுவாக வேரூன்றி இருக்கின்றன. “கதை” களாக மக்கள் மத்தியில் சுற்றிச் சுழல்கின்றன. சில வேளைகளில் இத்தகைய கட்டுக்கதைகளை நீக்கிய, ஆதாரபூர்வமான நபிமார்கள் வரலாறுகளை காணக் கிடைத்தாலும் அவை வரலாற்றுப் பார்வை, சமூகவியல் பார்வை, தஃவா கண்ணோட்டங்களை கொண்டவையாக இல்லை. இதனால் ஆதாரபூர்வமான வரலாறுகள் கூட நபிமார்களின் அற்புதங்கள் பற்றிய குறிப்புக்களை தாண்டிய முக்கியத்துவம் கொண்டவையாக எமது மனதில் பதிவது இல்லை. ஷெய்க் கைருல் பஷரின் ‘திடவுறுதி பூண்ட நபிமார்கள்’ எனும் நூல் தனக்கு சாத்தியமான எல்லைகளில் இத்தகைய குறைபாடுகள் நீங்கிய ஒரு வரலாற்றுப் பிரதியாக முகிழ்த்திருக்கிறது. நபிமார்கள் என்றால் Metaphysical வாழ்வைக் கொண்டவர்கள் என்கிற முன்னேற்றப்பட்ட பார்வைக் கோணங்களை கலைத்து நபிமார்களும் மனிதர்களே, சமூக சீர்திருத்த வாதிகளே, மனித குலத்தின் விடுதலை வீரர்களே என்கிற செய்தியை ‘திடவுறுதி பூண்ட நபிமார்கள்’ அழுத்தமாக முன் வைக்கிறது. நபி ஈஸா (அலை) அவர்களின் சரித்திரத்தின் இடைவெளிகளை வாசக நலன் கருதி பூர்த்தி செய்யும் முனைவில் பர்னபஸ் சுவிஷேஷங்களை ஷெய்க் கைருல் பஷர் பயன்படுத்தி இருக்கும் பாங்கு நுட்பமானது. இஸ்லாத்தின் மரபுத் தொடர்ச்சியையும், நபிமார்களின் வரலாறுகளையும் புதிய கண்ணோடத்தில் காண்பதற்கு எனக்கு உஸ்தாத் கைருல் பஷரின் ‘உலூல் அஸ்ம் – திடவுறுதி பூண்ட நபிமார்கள்’ என்ற நூல் தான் உதவியது. அந்த வகையில் உஸ்தாத் அவர்க்களுக்கான என்னுடைய நன்றிகள் சொல்லில் அடங்காதவை.
‘இஸ்லாமிய சிந்தனை’ ஆய்விதழ் உஸ்தாத் கைருல் பஷர் பற்றிய ஒரு சிறப்பிதழைக் கொண்டு வர வேண்டும். அவருடைய கட்டுரைகளை தொகுப்பதுடன் ‘உலூல் அஸ்ம்’ நூலையும் மீளப் பதிப்பிக்க வேண்டும். உஸ்தாத் கைருல் பஷருக்கு செய்யும் குறைந்த பட்ச நன்றிக் கடனே இவை. அவருக்கு உண்மையான, முழுமையான கூலியை வழங்க அல்லாஹ் இருக்கிறான். சர்வ வல்லமை மிக்க இறைவன் உஸ்தாத் கைருல் பஷரின் செயல்களை பொருந்திக் கொள்ளட்டும். அவரை தன்னுடைய பெருங் கருணையினால் போர்த்தட்டும். ஆமீன்.
By Lafees Shaheed